யேமன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஐ.நா தெரிவிப்பு
Related Articles
யேமனில் மக்கள் மனிதாபிமான உதவிகளை பெறமுடியாது பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அந்நாட்டில் கொளரா நோய்த் தொற்று தாக்கம் காணப்படும் நிலையில் கொவிட் 19 தொற்றினாலும் யேமன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யேமனுக்கு உதவிகளை செய்துவந்த சில நிறுவனங்கள் அதனை நிறுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனால் யேமனில் மக்கள் மனிதாபிமான உதவிகள் இல்லாது பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டிலுள்ள ஹெளத்தி கிளர்ச்சிக் குழுவின் தாக்குதல்கள் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் யுத்த சூழலில் வாழ்கின்றனர்.
இதனால் அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஹெளத்தி கிளர்ச்சிக்குழுவிற்கு எதிராக யேமன் அரசாங்கம் வெளிநாட்டு படைகளுடன் இணைந்து தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. நீண்ட நாட்களாக நீடிக்கும் வன்முறைகள் காரணமாக யேமனில் 24 மில்லியன் மக்கள் தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர். இது அந்நாட்டு சனத்தொகையில் மூன்றில் 2 பங்கு என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.