பொதுத் தேர்தலை நடத்தும் தினம் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று இன்றைய தினமும் இடம்பெறவுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் நாளையதினம் இடம்பெறவுள்ள நிலையில் அதுதொடர்பில் இறுதி தீர்மானம் பெறப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் தங்களுக்கு ஏற்ற திகதிகளை குறிப்பிட்டு தேர்தல் தொடர்பில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை பொதுத் தேர்தல் விருப்புவாக்கு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. போட்டியிடும் 22 மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சுத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்கள் மற்றும் வாக்குச் சாவடிகளின் பெயர்களும் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.