fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை எங்களிடம்..

ITN News Editor
By ITN News Editor மே 28, 2020 13:12

ஐக்கிய தேசியக்கட்சியின் 102 பேருக்கு கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. கட்சியின் யாப்பை மீறி ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இதில் அடங்குகின்றனர். கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டவர்களிடம் உரிய விளக்கம் கோரப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அடுத்த செயற்குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார எமது செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவித்தார். கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எழுத்து மூலமும் அறிவிக்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம்வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களில் 80 வீதமானோர் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்றனர். ஐக்கிய தேசியக்கட்சியில் 15 பேரே எஞ்சியுள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக செயற்பட்ட 95 வீதமானோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர். செயற்குழுவில் அங்கம் வகிக்கும் 79 உறுப்பினர்களில் 42 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைகின்றனர். இதன்மூலம் ஐக்கிய தேசியக்கட்சியின் நிலையை புரிந்து கொள்ள முடியும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் யாருடன் உள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ளமுடியும். ஐக்கிய தேசியக்கட்சியில் உள்ளவர்கள் ஒவ்வொரு முறையும் ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தி உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றியதே வரலாறாகும்.

கடந்த காலத்தில் 65 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து வெளியேறியிருந்தனர். இவ்வாறான நிலையில் கட்சி நாசமடைவதை தவிர்ப்பதற்காகவே பெரும்பாலான உறுப்பினர்கள் புதிய கூட்டணியொன்றை அமைத்துள்ளனர். இந்நிலையில் கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்க ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

 

ITN News Editor
By ITN News Editor மே 28, 2020 13:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க