கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 33 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, இதுவரை 283 கடற்படை வீரர்கள் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வீடு திரும்பியுள்ளதுடன் தொடர்ந்தும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 பேர் வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய நாட்டில் இதுவரை ஆயிரத்து 68 பேர் கொவிட் 19 வைரஸ தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 13 நோய் தொற்றாளர்களில் 7 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். குவைத் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கியிருந்த இருவரும் அதில் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, நோய் தொற்றிலிருந்து இதுவரை 620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 439 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலைகளில்; 110 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார பிரிவு அறிவித்துள்ளது