கொவிட் 19 வைரஸ் பரவலின் புதிய மைய பகுதியாக தென் அமெரிக்கா மாறும் அபயமுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நோய் தொற்றினால் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை தென் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. இதனால், வைரஸ் தாக்கத்தின் மைய பகுதியாக தென் அமெரிக்க நாடுகள் மாறக்கூடுமென உலக சுகாதர ஸ்தாபனத்தின் அவசர செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் மைக் ரயன் தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நோய் தொற்று தீவிரமடைந்துள்ளது.
அந்நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் நோய் தொற்றை அடையாளம் காண்பதற்கான மருத்துவ சோதனைகளும் குறைவாக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் நோய் தாக்கம் மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இரட்டிப்பான நாடாக பிரேஸில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.