கிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிரிக்கட் உள்ளிட்ட விளையாட்டு துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். கிரிக்கட் விளையாட்டு தொடர்பில் தேசிய செயற்றிட்டம் தொடர்பான அறிக்கையொன்றை தயாரித்து ஒரு மாத காலத்துக்குள் தன்னிடம் ஒப்படைக்கும் பிரதமர் இச்சந்திப்பின் போது கூறினார்.
கிரிக்கட் விளையாட்டை போன்றே ஏனைய விளையாட்டுக்களையும் மேம்படுத்த வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதமர் சர்வதேச ரீதியில் வெற்றிக்கொள்ள கூடிய விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
ஹோமாகம, பியகம மைதானம் நிர்மாணித்தல் தொடர்பில் இக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது. உத்தேச தியகம கிரிக்கட் மைதானத்தை நிர்மாணிப்பதற்கு பதில் பாடசாலைகளில் கிரிக்கட் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யவும் வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதமர் தீர்மானித்தார்.
சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் மற்றும் கிரிக்கட் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களின் கருத்துக்களை பெற்றதன் பின்னரே இவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் தலைசிறந்த கிரிக்கட் வீரர்களான ரொஷான் மகாநாம, மஹேல ஜயவர்தன, சனத் ஜயசூரிய, குமார சங்ககார உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, திலங்க சுமத்திபால ஆகியோரும் இங்கு கருத்துக்களை முன்வைத்தனர்.