கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய 23 மாவட்டங்களில் நேற்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார செயற்பாடுகளை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக கடந்த 11ஆம் திகதி திங்கள் ஆரம்பிக்கப்பட்ட நடைமுறைத் திட்டம் நேற்றிரவு 8 மணிவரை வரை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு பின்னர், நாளை முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும். முன்னர், வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கமைய செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். குழுக்களாக ஒன்றுக்கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்களுடன் ஒன்றிணைந்து நாளை முதல் நிறுவனங்களை பரிசோதிக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தற்போது திறக்கப்பட்டுள்ள அரச மற்றும் தன்னியார் நிறுவனங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்படும். வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் கண்காணிக்கப்படுவதோடு, அதை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.