வெளிநாடுகளுக்கான தபால் கடிதங்கள் மற்றும் பொதிகளை தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விமானம் மற்றும் கடல் மார்க்கமாக அனுப்பி வைப்பது தொடர்பில் இலங்கை தபால் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. கொவிட் 19 தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்த சேவைகளை மீண்டும் முன்னெடுப்பது தொடர்பில் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றின் காரணமாக விமான நிலையங்களில் வழமையான அலுவல்கள் நிறுத்தப்பட்டது. அதனையடுத்து, வெளிநாட்டு தபால் மூலமான பொதிகளை பரிமாறும் பிரதான நடைமுறையான விமான தபால் சேவை முழுமையாக செயலிழந்தது. தற்போது இலங்கை உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வரையறுக்கப்பட்ட வகையில் திறக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலுள்ள தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவையான கடிதங்கள் மற்றும் பொருட்களை அனுப்புவதற்கு இலங்கையில் வாழும் வெளிநாட்டு பாவனையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால், நிவாரண தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தபால் திணைக்களம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய நிலைமையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் தபாலை விநியோகிப்பதற்காக நடவடிக்கை இடம்பெறுகின்றமை உறுதிசெய்யப்பட்ட பின்னர் மாத்திரம் தபால் மூலமான பொதிகளை தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தற்போதைய நிலைமையின் கீழ் விமான சேவையை இரத்து செய்வதிலும், திருத்தத்தை மேற்கொள்வதிலும் தாமதம் இடம்பெறக்கூடும். இதேவேளை கடல் மார்க்கமான தபால் மூலம் இந்த சேவையை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.