லண்டனில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 194 மாணவர்கள் இன்று அதிகாலை, நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களை அழைத்து வருவதற்காக யு.எல். 503 என்ற விசேட விமானம் 8 பணியாளர்களுடன் நேற்று அதிகாலை லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்நிலையில் நாட்டிற்கு வருகை தந்துள்ள மாணவர்களிடம் கிருமியொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமானநிலைய உப தலைவர் ரஜீவ் சூரியராச்சி தெரிவித்தார். இதனையடுத்து, விசேட பஸ்களில் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் தங்கியிருந்து கல்வி கற்ற இலங்கை மாணவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இதேவேளை, சிங்கப்பூரில் நிர்க்கத்தியாகியுள்ள இலங்கை மாணவர்கள் 180 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கென விசேட விமானமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான குறித்த விமானத்தில் சிங்கப்பூர் நாட்டவர்கள் 10 பேரும் பயணித்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பமுடியாது சிக்கலை எதிர்கொண்டிருந்தனர். இன்று காலை 7.30க்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் இன்று மாலை 5.15க்கு நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.