இலங்கையில் இதுவரை 106 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் எந்தவொரு நோயாளரும் பதிவாகவில்லையென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 200 இற்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 46 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். அதில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்த ஆயிரத்து 484 பேர் இதுவரை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினமும் 305 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் வைத்தியர்களின் ஆலோசனையின் பின்னர் அவர்களை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். வைத்தியர்களின் ஆலோசணைக்கமைய எதிர்வரும் சில தினங்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தலை சுயமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை பூர்த்தி செய்த 443 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.