கொவிட் 19 நோய்த்தொற்றை தடுக்க, அரசாங்கத்தின் வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வைரஸ் தொற்றால் இதுவரை நாட்டில் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் 222 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் தமது பாதுகாப்பையும், சமூகத்தின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு பொறுப்புடன் உரிய ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டுமென அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை கொரோனா வைரஸ் ஒரு மாதத்தில் நபரொருவரிடமிருந்து சுமார் 403 பேருக்கு பரவக்கூடியளவு ஆபத்தானதென விசேட வைத்தியர் அநுருந்த பாதனிய தெரிவித்துள்ளார். அதன் பாரதூரத் தன்மையை உணர்ந்து பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஐ.டி.எச் வைத்தியசாலையின் புதிய இரு வாட் தொகுதிகள் 10 தினங்களுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. இதற்கென இராணுவத்தினர் 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.