வடகொரியா மீண்டும் அணுவாயுத சோதனையில் ஈடுபட்டுள்ளது. அந்நாட்டின் தெற்கு ஹெம்யோங் மாகாணத்தின் சொன்டொக் கரையோரப் பகுதியில் 3 ஏவுகணைகள் சோதனையிடப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த வாரம் குறுந்தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்திருந்தது. தற்போது மீண்டும் ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணுவாயுத தயாரிப்பை கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு வடகொரியா செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து அந்நாட்டின் மீதான பொருளாதாரத்தடையை நீக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் 3 மாத ஓய்வின் பின்னர் வடகொரியா ஏவுகணை சோதனைகளை ஆரம்பித்துள்ளது. ஒரு வாரத்திற்குள் 5 தடவைகள் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.