வடமாகாணத்தில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பெண்களை அச்சுறுத்தி வந்த குழுவைச் சேர்ந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து கைக்குண்டுகள், வாள்கள், கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் மோட்டார் சைக்கில்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சவக்கச்சேரி, சுன்னாகம், அச்சுசேலி, கோப்பாய் மற்றும் மன்னார் பொலிஸ் பிரிவுகளில் இனந்தெரியாதோர் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் நுழைந்து ஆயுதங்களை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் அச்சுவேலி பகுதியில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குழுவொன்று பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவல்களையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏனைய நால்வரும் கைதுசெய்யபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் இன்றைய மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளனர்.