ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட் இன்றைய தினம் இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது கூட்டத்தொடர் இடம்பெறுகிறது. அதன் இன்றைய அமர்வில் அவர் வாய்மூலான அறிக்கையை சமர்ப்பித்ததன் பின்னர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கைக்கு பதில் வழங்கப்படும். கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வில் 30/1 , 40/1 மற்றும் 34/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து இலங்கை விலகுவதை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை அமைச்சர் அதன்போது விளக்கி கூறினார். ஜனாதிபதி தேர்தலின் போது பொதுமக்கள் வழங்கிய ஆணைக்கமையவே இணை அனுசரணையிலிருந்து விலகி செல்வதாகவும் அவர் அறிவித்தார். இணை அனுசரணையிலிருந்து விலகினாலும் நல்லிணக்கப் பொறிமுறை, பொறுப்புக்கூறல்களிலிருந்து விலகிச் செல்லப்போவதில்லையென அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கைக்குள் தேசிய பொறிமுறையின் கீழ் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் வேலைத்திட்டம் காணப்படுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார். அமைச்சரவையினதும், பாராளுமன்றத்தினதும் அங்கீகாரமின்றி மேற்கொள்ளப்பட்ட இணை அனுசரணையின் மூலம் கடந்த அரசாங்கம் வெளிப்படையான ஜனநாயக விழுமியங்களை மீறியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லெட்டுக்குமிடையிலான சந்திப்பு நாளையதினம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை பிரதிநிதிகள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் பலவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.