அரச தொழில் வாய்ப்புகளுக்கென இணைத்துக் கொள்ளும் பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி நியமனப்பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரச வேலைவாய்ப்பை பெறுவதற்காக 50 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் தகமைகள் மீள ஆராயப்பட்டு மாவட்ட செயலாளர்கள் ஊடாக நியமனப்பத்திரம் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும். மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து அவர்கள் பயிற்சி நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். பயிற்சி காலத்திலும் மாதந்தம் 20 ஆயிரம் ரூபா ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.