fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனப்பெண்ணை முழுமையாக குணமடையச் செய்தமை இலங்கை சுகாதார துறை பெற்ற வரலாற்று வெற்றி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 12:18

கொரோனா வைரஸ் தொற்றினால் சிகிச்சைபெற்றுவந்த சீனப் பெண் முழுமையாக குணமடைந்துள்ளார். ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். அவரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியும் கலந்துகொண்டார். சீனாவின் ஹூபேய் மாகாணத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வருகை தந்த 43 வயதான சீனப் பெண் கடந்த மாதம் 26 ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட சீனப் பெண் தொடர்பில் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டறியப்பட்டது. அவருக்கு ஐ.டி.எச். வைத்தியசாலையில் தொடர்ச்சியான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அவர் முழுமையாக குணமடைந்துள்ளார். அவரது உடலில் வைரஸ் தாக்கம் இல்லையென பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோய் விசேட நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சீனப்பெண்ணை முழுமையாக குணமடையச் செய்தமை இலங்கை சுகாதார துறை பெற்ற வரலாற்று வெற்றியாகுமென சுகாதார அமைச்சர் பவிர்த்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்தார். நாட்டிற்கு கிடைத்த சரியான தலைமைத்துவம் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாக்க முடிந்தது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க தலைமையிலான அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். தினந்தோறும் கலந்துரையாடப்பட்டு தேவையான தொழிநுட்ப உதவிகளுடன் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஐ.டி.எச். வைத்தியசாலையில் பணிப்பாளர் ஹசித்த அத்தநாயக்க, வைத்தியர்களான எரங்க நாரன்கொட, ஆனந்த விஜவிக்கிரம, போன்றோர் சீனப் பெண்ணுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கியிருந்தனர்.

அவர்கள் சீனப் பெண்ணை காப்பாற்றவும் ஏனையவர்களுக்கு நோய்பரவுவதை தடுக்கவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். ஐ.டி.எச். வைத்தியசாலையின் தாதியர் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் சுகாதார அமைச்சர் என்ற அடிப்படையில் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்தார்.

இதேவேளை பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய சீனப் பெண் தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்காகவும் தனது உயிரை காப்பாற்றியமைக்காகவும் இலங்கை அரசாங்கத்திற்கும் வைத்தியர்களுக்கும் சுகாதார துறையினருக்கும் நன்றி தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 12:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க