ரயில்வே திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சிலர் போக்குவரத்து கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு அரச வாகனங்களில் பயணிப்பது குறித்து ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. ரயில்வே திணைக்களத்தினால் போக்குவரத்துக்காக வாகனங்கள் வழங்க முடியாத பட்சத்தில் அதிகாரிகளுக்கு மாதாந்தம் 61 ஆயிரம் ரூபா எரிபொருள் கொடுப்பனவாக அரசாங்கம் வழங்குகிறது.
எனினும் அரசாங்கம் வழங்கும் எரிபொருள் கொடுப்பனவை பெற்றுக்கொண்டு, திணைக்களங்களுக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்தி அவர்கள் தமது கடமைகள் மற்றும் தனிப்பட்ட பயண வசதிகளை பெற்றுக்கொள்வதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார். இவ்வாறு கொடுப்பனவை பெற்றுக்கொண்ட அதிகாரியொருவர் வருடத்திற்கு ஒருநாளாவது தமது கடமைகள் நிமித்தம் தொழில் புரியும் இடத்திற்கு வருகை தந்தது இல்லையெனவும் ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் எஸ்.பி.விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து சேவை அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் காமினி செனரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார். உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு அமைச்சரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க தெரிவித்தார். இவ்வாறான மோசடியில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எந்தவித பாகுபாடுமின்றி, அவர்களை பாதுகாக்காது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.