பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான மற்றுமொரு வீடமைப்பு திட்டம் இன்று ஆரம்பமானது. தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். ஹட்டன் வெளிஓயா தோட்ட மேற்பிரிவில் 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் குறித்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேகப் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
2020ல் இந்திய வீடமைப்புத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. காலியில் 200 வீடுகளும், இரத்தினபுரியில் 400 வீடுகளும், பதுளையில் ஆயிரத்து 600 வீடுகளும், கேகாலையில் 605 வீடுகளும், கண்டி – மாத்தளையில் ஆயிரத்து 400 வீடுகளும், நுவரெலியாவில் 5 ஆயிரத்து 795 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாகவே 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஹட்டன் வெலிஓயா மேற்பிரிவில் இடம்பெற்றது.