மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கான முற்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்கம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருந்தது. எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தமையால் இது தொடர்பான விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கமையவே நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இம்மாத இறுதியில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும், மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் உடன்படிக்கை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுவதாக துறைசார் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும், இது தொடர்பில் எவரும் அச்சப்படத்தேவையில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயமாக ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுமெனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார்.
இதேவேளை ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கும் யோசனைக்கு கடந்த ஜனவரி மாதம் 13 ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அதன்பின்னர் அரசாங்கத்திற்கும் கம்பனிகளுக்கும் இடையில் பல சுற்றுபேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமையவே சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.