சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிடியவுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்க குறித்த வழக்கு நாளைய தினம் விசாரணக்கு எடுத்துக்கொள்ளுமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அரச சிரேஸ்ட சட்டதரணி ஜனக்க பண்டார நீதிமன்றத்தில் விளக்கமளித்ததன் பின்னர் நுகேகொட நீதவான் எச்.யு.கே பெல்பொல இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
பிடிவிறாந்து பிறப்பித்தது தொடர்பாக சாட்சியமளிக்க பொருத்தமான அதிகாரியொருவரை நீதிமன்றத்திற்கு அழைக்குமாறு நீதவான் கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி நெவில் டி சில்வாவிற்கு உத்தரவிட்டார். சட்டத்துக்கு மேல் எவரும் இல்லையென சுட்டிக்காட்டிய அரசாங்க சிரேஸ்ட சட்டதரணி நீதிபதி தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போதுள்ள வழக்கு விவகாரங்கள் தொடர்பாக சந்தேகநபரான ரஞ்சன் ராமநாயக்க நீதிபதியுடன் கருத்து பரிமாறியுள்ளதாகவும் ஜனக்க பண்டார அங்கு தெரிவித்தார். முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி நடத்தும் உரைகளின் பேரில் நீதிபதியொருவர் தீர்ப்பு வழங்குவதாக நம்பிய போதிலும் அழுத்தம் காரணமாக தீர்ப்பு வழங்கப்பட்டால் அதன் பாரதூரத்தை கண்டறிய வேண்டுமென்றும் ஜனக்க பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதேநேரம் தான் வழங்கிய பணிப்புரைகளுக்கு ஏற்ப செயற்படாமை தொடர்பாக சட்ட மாஅதிபர் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு நேற்றைய தினம் தனது அதிருப்தியை தெரிவித்தார்.