நாட்டில் நிலவும் அதிக உஷ்ணமான வானிலை காரணமாக பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. உஷ்ண நிலை காரணமாக மயக்கம், மனஅழுத்தம், சதைபிடிப்பு, இருதய நோய் மற்றும் அதிர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பாதிக்கக்கூடும். இதனால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு கல்வியமைச்சிற்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
அதிகளவில் நீர் அருந்துதல், இனிப்பு சுவையுடன் கூடிய மென்பானங்கள் அருந்துவதை தவிர்த்தல், வகுப்பறைக்கு வெளியில் இருக்கும் போது தலையை மறைக்கக்கூடியவாறு தொப்பி அணிதல், வெளி இடங்களுக்கு பயணிக்கும் போது குடைகளை பயன்படுத்துதல் மற்றும் தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்தல் போன்ற அறிவுரைகளை சுகாதார அமைச்சு முன்வைத்துள்ளது.
அதிகளவான வெப்பநிலை காணப்படும் போது முகம் , கை, கால்களை கழுவுமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தினந்தோறும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதிக்குள் மாணவர்களை வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.