சகல காணி அலகுகளின் அளவீட்டு பணிகளை துரிதகதியில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
உரிய அளவீடுகளை தொடர்ந்து சகல காணி அலகுகளுக்கும் உரிமை பத்திரங்களை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். காணி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இவ்வாலோசனையை வழங்கினார். இனங்காணப்பட்ட மொத்த காணி அலகுகளின் எண்ணிக்கை 24 மில்லியனாகும். கடந்த 24 வருட காலத்தில் இவற்றில் 10 சதவீதமானவை அளவீடுகளுக்குட்படுத்தப்பட்டன.
இவ்வாறான அதி கூடிய காலம் கடந்தபோதிலும் எஞ்சியுள்ள 90 சதவீதமானவற்றின் அளவீட்டு பணிகளை பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். இதற்கு தேவையான சகல வசதிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார். குடும்ப தகராறுமற்றும் எல்லைகளற்ற காணிகள் இதன் கீழ் தீர்த்து வைக்கப்படும்.
நவீன அளவீட்டு உபகரணங்கள், ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நில அளவீட்டு திணைக்களத்தின் மனித வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் போது புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் பட்டதாரிகளை ஈடுபடுத்துவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. சகல அளவீடுகளும் ஒரே புள்ளி விபர தொகுதியில் உள்ளடக்கப்படவுள்ளது. இதற்கமைய எந்தவொரு நபருக்கும் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க முடி|யுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ;. ஜயசுந்தர, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க நில அளவீட்டாளர் எஸ்.டி.பி.ஜே தம்பேகம உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.