மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்
Related Articles
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகரை வாகனேரி, பொத்தானை, கிராண், கோராவெளி உள்ளிட்ட பல விவசாய பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை இடம்பெறுகின்றது. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் குளங்கள் திறக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் விசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன், நோய் தாக்கத்தினாலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. எஞ்சியுள்ள நெல்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை விற்பனை செய்வதில் நெல் கொள்வனவாளர்கள் குறைந்த விலையில் பெற்று கொள்வதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் எதிர்நோக்கும் நெல்லுக்கான விலை பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய மாவட்ட மட்டத்தில் நெற்சந்தைப்படுத்தும் சபையின் ஊடாக நெற்கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 60459 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் அதிகளவான அறுவடையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். திருகோணமலை, வெலிகந்த, பொலன்னறுவை போன்ற பகுதிகளில் உள்ள நெற்சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் நெல்லை களஞ்சியப்படுத்த மாவட்ட செயலகம் தீர்மானித்துள்ளது.