சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி ஒரு நாட்டில் பிறந்த இரட்டையர்கள் போன்று ஒன்றாக சிந்தித்து ஒன்றாக வாழக்கூடிய இலங்கையர்களை காண்பதே தனது எதிர்பார்ப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை இரட்டையர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இரட்டையர் கலாசார கண்காட்சியில் நேற்று மாலை கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஒன்றாக உலகை காண அதிஷ்டம் கிடைத்த 25 இரட்டையர்களால் 1996ம் இலங்கை இரட்டையர் சங்கம் உருவாக்கப்பட்டது. இன்று அந்த சங்கத்தில் 28 ஆயிரம் இரட்டையர்கள் உள்ளனர். நேற்றைய தினம் இடம்பெற்ற இக்கண்காட்சியில் 12 ஆயிரத்து 491 அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர். இதுவொரு உலக சாதனையாகும். இதற்கு முன்னர் கூடுதலான இரட்டையர்கள் இந்தியாவில் ஒன்று கூடியிருந்தனர். அங்கு 8004 பேரே ஒன்று கூடினர். தேரர்கள், மதகுருமார், பிக்குனிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்தவர்கள் இதில் இணைந்திருந்தனர். அவர்களின் கலாசார அங்கங்கள் விழாவை மேலும் மெருகூட்டியது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றினார்.
இதேநேரம் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. நிலையான அபிவிருத்தி இலக்குகளை எட்ட இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் ஆதரவு வழங்க தமது அமைப்பு தயார் என ஐநாவின் வதிவிட இணைப்பாளர் ஹெனா சிங்கர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்க யுனிசெப் அமைப்பின் அனுசரணையில் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் அங்கு தெரிவித்தார். தாம் அதுபோன்ற வேலைத்திட்டம் ஒன்றை அடையாளம் கண்டுள்ளதாகவும் சிங்கர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் தாபனத்துடன் தொடர்புப்பட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/GxJ8V0vBqPk”]