இவ்வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று ஏற்படவுள்ளது. இன்றிரவு 10.38 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகுமென கொழும்பு ஆதர்சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் அமையும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதற்கமைய இன்றிரவு 10.38 மணிக்கு ஆரம்பமாகும் சந்திர கிரகணம் ,நாளை அதிகாலை 2.45 மணி வரை நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திரகிரகணம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டுள்ளது. இந்நிகழ்வினை ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பார்க்க முடியுமென நாசா அறிவித்துள்ளது.
மேகமூட்டம் இல்லாத நிலையில் வெறும் கண்களால் சந்திர கிரகணத்தை பார்க்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாண்டு 3 சந்திர கிரகணங்கள் ஏற்படவுள்ளன. ஜுன் மாதம் 5 ம் திகதி, ஜூலை மாதம் 5 ம் திகதி மற்றும் நவம்பர் மாதம் 30 ம் திகதி ஆகிய தினங்களில் சந்திர கிரகணம் ஏற்படுமென நாசா அறிவித்துள்ளது.