இங்கிலாந்து அரச குடும்ப உயர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அறிவித்துள்ளனர். தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இங்கிலாந்து மற்றும் வடஅமெரிக்காவில் வசிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரச குடும்பத்துடன் சில கருத்து வேறுபாடுகள் உள்ளதாக அவர்கள் கருத்து வெளியிட்டு வந்த நிலையில், தற்போதைய அறிவிப்பு அரண்மனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இவர்கள் இங்கிலாந்து ராணியிடம் கூட ஆலோசனை நடத்தாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இது தொடர்பில் பெக்கிங்ஹேம் அரச மாளிகை அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. ஹரி மற்றும் மேகனுடனான எங்களது பேச்சுவார்த்தை முதல்கட்டத்திலேயே காணப்படுகிறது. மாறுபட்ட சூழலில் வாழவேண்டுமென்ற அவர்களின் ஆசையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனினும் இதனை செயல்படுத்துவதற்கு அதிக காலம் எடுக்குமென பெக்கிங்ஹேம் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை தாம் இங்கிலாந்து அரச குடும்ப உயர்பதவியிலிருந்து விலகினாலும், இங்கிலாந்து ராணிக்கான தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்குமென இளவரசர் ஹரி மற்றும் மேகன் தெரிவித்துள்ளனர்.