ஈரான் தலைநகருக்கு அருகில் யுக்ரேன் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து
Related Articles
176 பேருடன் பயணித்த யுக்ரேனுக்கு சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன. ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகில் விபத்து இடம்பெற்றுள்ளது. யுக்ரேனுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் தரையிலிருந்து மேலெழுந்து சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்ப கோளாறே விபத்திற்கு காரணமென ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமான விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததிருக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்துள்ளநிலையில் இது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்கலாமென சில சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் புரட்சிப் படையணித் தலைவர் காஷிம் சுலைமானி கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நோக்கில் ஈராக்கிலுள்ள அமெரிக்க கூட்டுப்படை தளங்கள் மீது 15 க்கும் மேற்பட்ட பலஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. பின்னர் ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்யை இட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் தான் நாளை விசேட அறிவிபொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இப்பிரச்சினையை அமைதியாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை ஈராக்கில் தங்கியுள்ள தமது நாட்டு பாதுகாப்பு படையினர் குறித்து விசேடமாக கண்டறியுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈராக்கிலிருந்து வெளியேறுமாறு பிலிப்பைன்ஸ் தமது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மேலும் ஈராக்கிலுள் தமது நாட்டு பிரச்சினைகளின் பாதுகாப்பு தொடர்பில் கண்டறியவுள்ளதாக இந்தியாவும் பாகிஸ்தானும் அறிவித்துள்ளன. இ
தனிடையே குறித்த இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளையும் தூதரக மட்டத்தில் தீர்த்துக் கொள்ளவேண்டுமென நியுசிலாந்து சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை ஈராக்கில் தங்கியுள்ள தமது படையினரை மீள அழைக்கவுள்ளதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க – ஈரான் முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ள நிலையில் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.