ரயில்களில் யாசகம் செய்வோருக்கென அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. யாசகர்களில் விசேட திறமையுடைய நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறன்களை மேலும் மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்தும் நடவடிக்கை எதிர்வரும் சில மாதங்களில் முன்னெடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார். யாசகர்களால் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுகிறது. அதனால் அவர்களை கைதுசெய்து, புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கை இடம்பெறுகிறது.
எனவே அவ்வாறு புனர்வாழ்வளிக்கப்படுகின்றவர்களிடம் காணப்படும் திறமைகளை அடையாளம் கண்டு, தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமென இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார். இதேவேளை ரயில்களில் யாசகம் செய்யும் நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி முதல் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.