நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2019 18:19

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக அதிகரித்துள்ளன. இதுவரை 43 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படவேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து வெள்ளப்பெருக்கு நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சில வீதிகள் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில் மார்க்கங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் 8 ரயில் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் முப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு , கரடியனாறு வடக்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26 பேரை மீட்பதற்கென விமானப்படையினர் பெல் ஹெலிக்கப்டர்களை பயன்படுத்தியுள்ளனர். கலாவௌ பெருக்கெடுத்ததன் காரணமாக இபலோகம கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட திக்வெல்ல கிராமத்தில் 28 பேர் பாதிக்கப்பட்டனர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை வரை எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் ஆய்வாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்தார். மாத்தளை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் நாளையும் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2019 18:19

Default