சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Related Articles
சீரற்ற வானிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. செல்லக் கதிர்காமம் பகுதியில் 432 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 575 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கும்புக்கன் ஓயா பெருக்கெடுத்தமையால் யால பகுதியில் விடுதியில் தங்கியிருந்த 12 பேர் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டனர்.
இதேவேளை ஊவா பரணகம கலஹகம பகுதியில் ஐந்து வீடுகளிலிருந்த 21 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களது வீட்டு சுவர்கள் இடிந்து விழும் அவதான நிலை காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகும். அதிக மழை காரணமாக கலஹகம, எலனாய மற்றும் அளுத்வத்த பகுதிகளில் சில வீடுகளில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வெள்ளப்பெருக்கு நிலை காரணமாக பொலன்னறுவை சோமாவதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுங்காவில் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனிடையே பதுளை – எல்ல நகரில் சுற்றுலா விடுதியொன்று இடிந்து வீழ்ந்ததில் வெளிநாட்டவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அவுஸ்திரேலிய பிரஜைகளென தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் பதுளை வைத்தியசாலையிலும் மற்றையவர் தெமோதர பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உரிய தரமின்றி அமைக்கப்பட்டிருந்த சுவர் அதிக மழை காரணமாக இடிந்து வீழ்ந்திருக்கலாமென எல்ல பிரிவுக்கு பொறுப்பான கிராம அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். மலையகத்தில் சீரற்ற காலநிலையால் வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வளைவுகள் நிறைந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் வாகன முன்புற விளக்குகளை ஒளிரச்செய்தவாறு பயணிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனூடாக விபத்துக்களை தவிர்த்துக்கொள்ள முடியுமென ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை தொடர் மழை காரணமாக தேயிலை கொளுந்து பறிக்கும் தொழிலாளர்களின் வருகையும் குறைந்து காணப்படுகிறது. இதனால் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.