நாளை முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரி திருத்தங்களினூடாக கிடைக்கப்பெற்ற சலுகையை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் கலாநிதி லலித் என் செனவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மா பக்கற்றொன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 400 கிரேம் பால்மா பக்கற்றொன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும். இதற்கு மேலதிகமாக ஏனைய நிறைகளை கொண்டுள்ள பால்மாக்களின் விலையும் குறைவடையும். இதேவேளை விலை குறைப்பு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பால்மா நிறுவனங்களும் இணங்கியுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் கலாநிதி லலித் என் செனவீர தெரிவித்துள்ளார்.