ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 நான்கு சந்தேகநபர்களும் இன்று அதிகாலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்திலேயே குறித்த நான்கு சந்தேகநபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெலுங்கானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட பாலத்திற்கு அடியில் கொலையை எவ்வாறு செய்ததாக சந்தேகநபர்கள் நடித்து காட்டிய போது தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நான்கு சந்தேகநபர்களும் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானா செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பத்தின் போது இரண்டு பொலிசார் காயமடைந்தனர். கடந்த 28 ம் திகதி இந்த பெண் மருத்துவரின் சடலம் இந்திய அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டன. கடந்த சில நாட்களில் ஹைதராபாத் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்த 4 சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோஷமிட்டனர்.
2017 ம் ஆண்டு மாத்திரம் இந்தியாவில் பெண்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக 33 ஆயிரத்து 658 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அங்குள்ள பாடசாலை மாணவிகள் கல்லூரி பஸ் வண்டியில் சென்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் அத்துடன் ஐதராபாத்தில் கல்லூரி சென்ற மாணவிகள் வீதிகளில் பாதுகாப்புக்கு நின்ற பொலிஸாரை பார்த்து கைகாட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.