அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஐரோப்பிய சங்கம் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் பல நிறுவனங்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் புதிய ஜனாதிபதிக்கு தனது அரசாங்கத்தின் பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார். மக்களின் நலன்கருதி பணியாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க பின்னிற்க போவதில்லையென அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய சங்கமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியுடன் நெருங்கி செயற்பட ஐரோப்பிய சங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவ்வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து தேர்தலில் வாக்களித்த இலங்கை மக்களுக்கு தனது மரியாதையை தெரிவிப்பதாகவும் ஷின்ஷோ அபே கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை தொடர்ந்து இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடையும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அவ்வுறவுகளை விரிவுப்படுத்தி அமைதி சூழலை கட்டியெழுப்ப ஒருங்கிணைந்து செயற்பட வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இரு நாடுகளுக்கும் இடையிலான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை பலப்படுத்தி நெருங்கி செயற்பட கோட்டாபய ராஜபக்ஷவின் நியமனம் காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.