சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆட்கடத்தலில் ஈடுபட்ட சீன நாட்டவரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சீனாவில் செயற்படும் சமூகவலைத்தளம் ஒன்றை பயன்படுத்தி தெற்காசிய வலய நாடுகளிலுள்ள இளைஞர்களை சீனாவுக்கு அழைத்துவந்து அவர்களை ஆட்கடத்தல் செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த செயற்பாட்டை முன்னின்று மேற்கொண்ட சீன நாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 28 வயதான சந்தேகநபர் அபுதாபியிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து சந்தேகநபர் வருகைதந்த விமானத்தினூடாகவே மீண்டும் அவரை அபுதாபிக்கு நாடு கடத்துவதற்கு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.