இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.