ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் செயற்பாடுகள் நிறைவுற்றுள்ளன. இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்பட்டன. கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர். காலை 9 மணி முதல் 11.30 மணி வரை வேட்புமனுக்களை ஆட்சேபனை செய்வதற்காக காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை வேட்புமனு தாக்கல் இடம்பெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் தேர்தல் செயலகம் அமைந்துள்ள இராஜகிரிய பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர். ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வேட்புமனு பொறுப்பேற்கும் நிகழ்வு காரணமாக இராஜகிரிய பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் செயலகத்திற்கு மாத்திரம் ஆயிரத்து 200 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 500க்கும் மேற்ப்பட்ட பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.