அபிவிருத்தியில் புதியதோர் அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (28) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்ச்சித்திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஓய்வு பெறுவதற்கு தனக்கு எவ்வித தேவையும் இல்லை என்றும், நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு தான் சிறந்த தேகாரோக்கியத்துடன் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் பொலன்னறுவை மாவட்டத்திற்காக வரலாற்றில் இடம்பிடிக்கும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பொலன்னறுவை இசிப்பத்தான நலன்புரி சங்கத்தின் சனசமூக நிலையத்தை மக்களிடம் கையளிப்பதை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலன்னறுவை இசிப்பத்தான விகாராதிபதி சங்கைக்குரிய உடகம தம்மானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை 213 மில்லியன் ரூபா செலவில் வெளிக்கந்த பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவு, நிர்வாக கட்டிடம் இன்று ஜனாதிபதி அவர்களினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளி ஜனாதிபதியினால் பதிவு செய்யப்பட்டார்.
பிரதேசத்தில் வாழும் மக்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் வெளிக்கந்த பிரதேச வைத்தியசாலையை அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு “எழுச்சிபெறும் பொலன்னறுவை” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தரமான கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் 72 இலட்சம் ரூபா செலவில் திம்புலாகல கடவத்மடுவ பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடம் ஜனாதிபதி அவர்களினால் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி மாணவர்களின் நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.
அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.