சகல மாவட்டங்களையும் மையப்படுத்தி தமிழ் மொழிமூல பாடசாலைகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் பொருட்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் முதற்கட்டம் இரத்தினபுரி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு தமிழ் மொழிமூல உயர்தர பாடசாலை அமைக்கும் வேலைத்திட்டமாக இது முன்னெடுக்கப்படவுள்ளது. அதனடிப்படையிலேயே இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் கல்வி கற்கும் அதிகளவான மாணவர்கள் இருக்கின்றனர். அங்குள்ள மாணவர்களுக்கு உயர்கல்வியின் கணித, விஞ்ஞான பாடங்களை தொடர்வதற்கு ஒரு பாடசாலை கூட இல்லை. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளும் மிக தொலைவாகவே உள்ளன.
அதற்கமைவாகவே நீண்டநாள் ஆலோசனைக்கமைய இரத்தினபுரி புதிய நகரில் தமிழ் மொழிமூல உயர்தர பாடசாலையொன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திபபின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.