மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.