மேல் மாகாணத்தில் சகல பஸ்களுக்கும் GPS தொழில்நுட்பம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2019 15:29

மேல் மாகாணத்தில் சகல பஸ்களுக்கும் GPS தொழில்நுட்பம்

சிறந்த போக்குவரத்து சேவையினை பயணிகளுக்கு வழங்கும் பரந்த வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. GPS தொழில்நுட்பத்தினூடாக பயணிகள் பஸ் வண்டியினை கண்காணித்தல் மற்றும் பயணச்சீட்டு இயந்திரங்களை இலவசமாக வழங்குதல் ஆகியன இதனூடாக முன்னெடுக்கப்படுகின்றன. மேல் மாகாணத்தை மையப்படுத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துஷித குலரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஒத்துழைப்புடன் பயணிகள் போக்குவரத்தினை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய பாணந்துறை – கொழும்பு வழித்தடம், அவிசாவளை – கொழும்பு வழித்தடம், கண்டி – கொழும்பு வழித்தடம் ஆகியவற்றினூடாக பயணிக்கும் பஸ்களுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன.

அதனொரு கட்டமாகவே GPS தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது. மேலும் தற்போது கையில் எழுதித் தரப்படுகின்ற டிக்கெட்டுக்களுக்கு பதிலாக இலத்திரனியல் அட்டையினை வழங்கும் நடைமுறையினை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை காலப்போக்கில் மேல் மாகாணம் முழுவதும் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை மேல் மாகாணம் முழுவதும் புதிதாக ஆயிரத்து 500 பஸ் நிலையங்களை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துஷித குலரத்ன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2019 15:29

Default