fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று மகாகவி மறைந்த நாள் : 11.09.1921

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 12:00

இன்று மகாகவி மறைந்த நாள்  : 11.09.1921

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதிஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது.

சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார். தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்’ எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார்.

தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர். இந்த மகாகவி 1921 செப்டம்பர் 11 அதாவது இதேபோன்ற ஒரு தினத்தில் 98 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலக வாழ்க்கைக்கு விடைக் கொடுத்தார்.

  • கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி – பாரதி
ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 12:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க