எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு விசேட நிரந்தர மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். நிசங்க சேனாதிபதி உள்ளிட்டோர் தொடர்பான எவன்கார்ட் வழக்கு விசாரணை கொழும்பு நிரந்தர விசேட மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.
அதற்கமைய இன்றையதினம் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக 7 ஆயிரத்து 573 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கும் 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஹிக்கடுவை கடல்பகுதியில் எவன்கார்ட் என்ற கப்பலினுள் உரிய ஆவணங்கள் இன்றி ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனூடாகவே பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.