புலமைப்பரிசில் வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதிப்பெறுகின்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 15 ஆயிரம் பிள்ளைகளுக்கு தற்போது வரை புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென வருடாந்தம் 625 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
இந்நிலையில் இவ்வருடம் முதல் இம்மாணவர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை குறித்த மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற பணத்தொகையை 500 ரூபாவிலிருந்து, 750 ரூபா வரை அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கியுள்ளது. இதேவேளை புலமைப்பரிசில் பெறுவதற்கு தகுதியுடைய மாணவர்களின் குடும்பத்தின் மாதாந்த வருமானம் 15 ஆயிரம் ரூபாவுக்கும் குறைவாக இருக்கவேண்டுமென திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.