இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜந்த மென்டிஸ் சகலவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 34 வயதான அஜந்த மென்டிஸ் கடந்த 2008ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச போட்டிகளுக்கான அறிமுகத்தை பெற்றார். அதன் பின்னர் இலங்கை சார்பில் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், ஒரு 10 விக்கெட்டுக்கள் பிரதி மற்றும் நான்கு 5 விக்கெட்டுக்கள் பிரதி உள்ளடங்கலாக 70 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
87 ஒருநாள் போட்டிகளில் மூன்று 5 விக்கெட்டுக்கள் பிரதியுடன் 152 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். மேலும் 19 ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய அவர் ஒருநாள் அரங்கில் வேகமாக 50 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை அவரது சாதனை பந்துவீச்சாகும்.
மேலும் 39 டுவெண்டி – 20 போட்டிகளில் இரண்டு முறை 6 விக்கெட்டுக்களை வீழ்த்திய சாதனையுடன் மொத்தமாக 66 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு கிறிஸ்சேர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டிக்கு பின்னர் அவர் எவ்விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை.