நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்திலும் பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் மேல்மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.