அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள நாட்டை கடன் பளுவிலிருந்து மீட்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒருகொடவத்தை கொரியா இலங்கை தொழில்நுட்ப நிருவகத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் கொரிய எக்ஸிம் வங்கி ஆகியன இணைந்து கூட்டு முயற்சியாக ஒருகொடவத்தை கொரிய இலங்கை தொழில்நுட்ப பயிற்சி நிருவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 ஆயிரத்து தொள்ளாயிரம் மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு மண்டபம், விரிவுரை மண்டபம், நூலகம், விடுதிவசதி, சிற்றூண்டிச்சாலை என்பன இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நவீன விஞ்ஞான ஆய்வு கூடம், கணினி மற்றும் மொழி ஆய்வு கூடம் என்பனவும் இதில் உள்ளடங்கும்.
நவீன உலகிற்கு பொருத்தமான பல்வேறு கற்கை நெறிகள் இங்கு போதிக்கப்படுவதுடன் கற்கை நெறிகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு என்வி.கியூ 5 மற்றும் என்விகியூ 6 தேசிய மட்டத்திலான டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. குறித்த தொழில்பயிற்சி நிலையம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அமைச்சர் ரிஷாட் பதியூதின் ராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/H-aW_0-jSlk”]