பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கும் மற்றொரு கட்டம் இன்று நுவரெலியாவில்
Related Articles
பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கும் மாவட்ட மட்ட வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் இன்று இடம்பெறுகிறது. நுவரெலிய மாவட்ட செயலகத்தில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெறுகிறது.
இங்கு 218 பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கும் ஆரம்ப நிகழ்வு கடந்த 30 ம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அன்றைய தினம் 3 ஆயிரத்து 800 பேருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனங்கள் வழங்கப்பட்டன. எதிர்வரும் 2 ம் திகதிக்கு முன்னர் 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்தார். அதற்கமைய மாவட்ட மட்டத்தில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
அதற்கமைய இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 203 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி மட்டக்களப்பு டேப்பா மண்டபத்தில் வைத்து இவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன் மற்றும் யோகேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.