சகல தோட்டப்புற வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தோட்ட வைத்தியசாலைகளை மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து அரசாங்கம் வைத்தியசாலைகளுக்கு வழங்குகின்ற நிதியொதுக்கீடுகளை இந்த வைத்தியசாலைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற மாகாண சுகாதாக அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சகல தோட்டப்புற வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென தான் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்ததாகவும் அதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். சிறந்த வைத்தியசாலை கட்டமைப்பை மேற்கொள்ளும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதற்கமைய கட்டம் கட்டமாக தோட்டப்புற வைத்தியசாலைகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படுமென சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.