fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலை மாணவர்களுக்கு தூய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 12:35

பாடசாலை மாணவர்களுக்கு தூய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

பிள்ளைகளுக்கு தூய பசும்பால் பக்கெற்றுக்களை வழங்குவதற்காக பரந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்கென சகல தரப்பினருக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாய மக்களின் பொருளாதாரத்தை சக்திமிக்கதாக்குவதும் இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமென ஜனாதிபதி தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு நாள்தோறும் பசும்பால் பக்கெற் ஒன்றை வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று இரத்தினபுரியில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பால் பக்கெற்றின் சுத்தம், தரம் ஆகியன மிக முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டும். அதேபோல் கல்வியமைச்சு, கல்வி பணிப்பாளர்கள், மாகாண சபை ஆகிய தரப்பினர் இந்த வேலைத்திட்டம் குறித்து பூரண அவதானம் செலுத்தவேண்டுமென்பதை தான் தயவுடன் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். இதில் சிறிய பிழை நடந்தால் அது மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தும். பிள்ளைகளின் போசாக்குடன் தொடர்புடைய விடயமென்பதால் இதுகுறித்து சகல தரப்பும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நிகழ்வில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொற்றா நோயை தடுக்கும் வகையில் பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக சிறந்த உணவு எது? கூடாத உணவு எது? என்பது குறித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும். இவைதான் மிக முக்கியமான தேவையாக உள்ளது. தாய்ப்பாலுக்கு பிறகுள்ள மிகச்சிறந்த பால்தான் பசும்பால். பால்மா பழக்கத்திற்குள்ளாகியுள்ள நாட்டுக்குள் பசும்பால் பழக்கத்தை ஏற்படுத்தினால் செயற்கை பொருட்கள் உள்ளடக்கி தயாரிக்கப்படும் பால்மாவினால் ஏற்படும் தீய விளைவுகளை எம்மால் தவிர்த்துக்கொள்ள முடியும். தூய பசும்பாலில் புரோட்டீன் மிக முக்கியமாக கல்சியம் மற்றும் ஏனைய விற்றமின்கள் கிடைக்கும். 22 வயது வரை மாத்திரமே எலும்புகள் வளர்ச்சியடையும். இந்த வயதிற்கு மேல் எவ்வளவு கல்சியம் எடுத்துக்கொண்டாலும் அது பயனற்றது. எனவே ஜனாதிபதியின் மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் வேலைத்திட்டத்தினூடாக போசனைமிக்க எதிர்கால பரம்பரையொன்று உருவாகும். ஜனாதிபதியின் இவ்வேலைத்திட்டத்திற்கு சுகாதார அமைச்சு பூரண ஒத்துழைப்பை வழங்குமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பால் நிறைந்த தேசம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான 4 இலட்சம் மாணவர்களுக்கு நாளாந்தம் 150 மில்லிலீற்றர் பசும்பால் வழங்கப்படவுள்ளது. சுவையூட்டப்பட்ட பாலுக்கு பதிலாக சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய தரம் உறுதி செய்யப்பட்ட திரவப் பால் பக்கெற் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கென அரசாங்கம் வருடத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 12:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க