கொழும்பு புதுக்கடை நீதிமன்ற இல்ல கட்டிட தொகுதியை நிர்மாணிப்பது தொடர்பாக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படும் ஒரு சில தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையென நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்புதிய நீதிமன்ற வளாக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு ஆறு ஏக்கர் காணி ஒதுக்கப்படடுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்தது. 12 மாடிகளை கொண்ட இக்கட்டிட தொகுதியில் 40 நீதிமன்றங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அமைச்சின் நடவடிக்கைகளுக்காகவும் நீதிபதிகளின் பயிற்சி மத்திய நிலையத்திற்காகவும் பிரத்தியேக 8 மாடிகளை கொண்ட 2 கட்டிட தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அத்துடன் புதிய சட்ட மத்திய நிலையத்திற்காகவும் 8 மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 95.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை செலவிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பத்திரிகை விளம்பரங்கள் மூலம் இதற்கு 13 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ள போதிலும் இதுவரை முதலீட்டாளர்கள் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லையென அமைச்சு வலியுறுத்தியுள்ளது.